கமல் பத்து வேடங்களில் நடித்து இரண்டு வருட பெரும் எதிர்பார்ப்புகளுக்குப் பின் கம்பீரமாக
சவாலுடன் திரைக்கு வந்திருக்கிறது தசாவதாரம் படம்.
படத்தின் கதை 12 ம் நூற்றாண்டில் துவங்கி 21 ம் நூற்றாண்டில் முடிகிறது. படத்தின் துவக்கமே அசத்தலான வித்தியாசமான காமிரா பார்வையுடன் துவங்குகிறது. 12 ம் நூற்றாண்டு சோழர் கால சைவ, வைணவ சண்டையுடன் கதை ஆரம்பிக்கும்போதே பிரம்மாண்டமும் ஆரம்பமாகிறது. வைணவ இளைஞனாக வரும் ரங்கராஜன் நம்பி (கமல் 1) சோழ மன்னன் “ஓம் நமச்சிவாய” என்று சொல்லச் சொல்ல அதற்கு நம்பி “ஓம் நமோ நாராயணாய” என்று சொல்லி சாவுக்குத் துணிகிறார். சோழர் காலத்து காட்சியில் வரும் பிண்ணனி இசை மற்றும் வாலியின் “கல்லை மட்டும் கண்டால்…” பாடல் அந்தக் காலத்திற்கே நம்மை அழைத்து செல்கிறது.
அமெரிக்காவில் ஆராய்ச்சித்துறை விஞ்ஞானியாக பணிபுரியும் கோவிந்த் (கமல் 2) குழு உலகையே அழிக்கும் வைரஸ் ஒன்றைக் கண்டு பிடிக்கிறார்கள். அதை அக்குழுவின் மேலதிகாரி தீவிரவாதிக்கு விலை பேச அது கமலுக்கு தெரிந்து அந்த வைரசைக் கடத்தி இந்தியா வருகிறார். அவரை அதிபர் புஷ்சின் (கமல் 3) உத்திரவுப்படி எஃப் பி ஐ மற்றும் கூலிப்படை வில்லன் பிளெட்சர் (கமல் 4) துரத்த, பின் ஆக்சன், சேஸிங் என படம் செல்கிறது. அமெரிக்க அதிபர் புஷ் வேடத்தில் வரும் கமல், அவரது பேசும் விதம் மற்றும் சில வசனங்களில் புஷ்சையே தூக்கி சாப்பிட்டு விடுகிறார்.
உளவுத்துறை அதிகாரியாக வரும் பல்ராம் நாய்டு (கமல் 5) நகைச்சுவையில் பிண்ணி எடுக்கிறார். அவரது பேச்சு, அசைவுகள் மற்றும் அனைத்திலும் தெலுங்கு கார் ஆகவே மாறியிருக்கிறார்.
கிருஷ்ணவேணி பாட்டி வேடத்தில் வரும் கமல் (கமல் 6) தோற்றத்தில் சற்று குள்ளமாக நடித்திருப்பது அருமை. பஞ்சாப் பாடகராக வரும் கமல் (கமல் 7) சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார். தலித் இளைஞனாக வரும் பூவராகவன் (கமல் 8 ) பேச்சில் கோபம் தெறிக்கிறது. ஜப்பான் கராத்தே மாஸ்டராக வரும் கமல் (கமல் 9) கடைசியில் வரும் சண்டை காட்சியிலும், சுனாமி வருவதை ஜப்பான் கமல் மூலம் சொல்வதும் கமலின் நுட்பத்தைக் காட்டுகிறது. முஸ்லிம் அப்பாவி இளைஞனாக வரும் கமலின் (கமல் 10) ஏழு அடி உயரம் வியக்க வைக்கிறது. அசின் அக்ரகாரத்து பெண்ணாகவே வலம் வருகிறார்.
ஒரு சில இடங்களில் சற்று உற்றுப் பார்த்தால் மட்டுமே கமல் வருவதும், பேசும் வசனங்களும் தெரிகிறது. ஒரே காட்சியில் இரண்டு மூன்று கமல் வருவதும் போவதும் மிக நேர்த்தியாக நமக்கு எந்த விதத்திலும் தெரியாமல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தியிருப்பது அருமை.
கமலின் ஒவ்வொரு அவதாரத்திற்கும் பேச்சு, பாவனை என அவர் வித்தியாசம் காட்டியிருப்பது அவரின் அனுபவத்தையும் திறமையையும் காட்டுகிறது. ரவிவர்மாவின் ஒளிப்பதிவு, தேவி ஸ்ரீபிரசாத்தின் பிண்ணனி இசை, கமலின் நடிப்பு மற்றும் கே.எஸ்.ரவிக்குமாரின் உழைப்பு படத்தின் வெற்றிக்கு முதுகெழும்பாக அமைகிறது. படத்தில் வரும் சுனாமி மற்றும் சோழர் காலத்து காட்சிகள் கிராபிக்ஸ் முறையில் மிக அருமையாக காண்பித்திருப்பது படத்திற்கு ப்ளஸ்.
தசாவதாரம் – தமிழ் திரையுலகில் மைல் கல்.