சூர்யா ப‌திவுக‌ள்

‘ஈரோடு’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்

த‌ட‌ம் மாறிய‌ ப‌ய‌ண‌ம்

பதிந்தவர் சூர்யா மேல் ஜனவரி 17, 2009

சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன்பு ஈரோட்டிலிருந்து ம‌துரை சென்ற‌ பொழுது ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம் இது. நாங்க‌ள் ஈரோட்டிலிருந்து ம‌துரை செல்வ‌த‌ற்காக‌ மும்பை-நாக‌ர்கோவில் எக்ஸ்பிர‌ஸில் முன்ப‌திவு செய்திருந்தோம். மாலை 5.10 க்கு ர‌யில் கிள‌ம்பும் என்ப‌தால் நாங்க‌ள் 4.30 ம‌ணிக்கே ர‌யில் நிலைய‌ம் சென்றுவிட்டோம். ர‌யில் நிலைய‌ விசார‌ணை அலுவ‌ல‌க‌த்தில் மும்பை ர‌யில் எந்த‌ பிளாட்பார‌ம் என்று கேட்ட‌பொழுது முத‌ல் பிளாட்பார்மில் நிற்கிற‌து சீக்கிர‌ம் செல்லுங்க‌ள் என்றார்க‌ள்.

நாங்க‌ளும் வேக‌மாக‌ ர‌யிலை நோக்கி சென்றோம். என் க‌ண‌வ‌ர் அவ‌ச‌ர‌ப்ப‌டுத்திய‌தால் வேக‌மாக‌ப் ப‌டியேறி பிளாட்பார்மில் ஓடிய‌பொழுது வ‌ழுக்கி அதே இட‌த்தில் விழுந்துவிட்டேன். விழுந்த‌தில் காலிலும் அடி, ஒரு செருப்பும் அறுந்துவிட்ட‌து, என்ன‌ செய்வ‌தென்று தெரியாம‌ல் செருப்பை ஒரு கையில் பிடித்த‌ப‌டி நிற்கிறேன், என் க‌ண‌வ‌ரோ ப‌ர‌வாயில்லை ர‌யிலில் ஏறி பார்த்துக்கொள்ள‌லாம் ஓடி வா என்று கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஓடினார். ஒரு வ‌ழியாக‌ எங்க‌ள் க‌ம்பார்ட்மெண்டில் ஏறி எங்க‌ள் சீட் நெம்ப‌ரை தேடிய‌பொழுது அங்கே ஏற்க‌ன‌வே இருவ‌ர் அம‌ர்ந்திருந்த‌ன‌ர். ஏற்க‌ன‌வே ஓடி வ‌ந்த‌ க‌ளைப்புட‌னும் செருப்பு அறுந்த‌ கோப‌த்துட‌ன் இருந்த‌ நான் அவ‌ர்க‌ளிட‌ம் இது எங்க‌ள் சீட் என்று க‌டுப்பாக‌க் கூறிய‌வுட‌ன் அவ‌ர்க‌ள் பேசாம‌ல் எழுந்து சென்று எதிற்புற‌ம் அம‌ர்ந்த‌ன‌ர். வ‌ண்டி பிளாட்பார‌த்தில் இருந்து புற‌ப்ப‌டத் த‌யாரான‌தும் உள்ளே காபி.. காபி… காபி..  சார் காபி… சார் காபி..காபி.. காபி… சார் காபி.., என்று கூவி காபி விற்றுக்கொண்டிருந்த‌வ‌ர்க‌ள் வ‌ண்டி கிள‌ம்பிய‌தும் ஓடும் வ‌ண்டியில் இருந்து ச‌ற்றும் அல‌ட்டாம‌ல் இற‌ங்கி சென்ற‌தைப் பார்த்த‌தும், எப்ப‌டி இவ‌ர்க‌ளால் ம‌ட்டும் இப்ப‌டி அனாச‌ய‌மாக‌ ஓடும் வ‌ண்டியில் இருந்து இற‌ங்க முடிகிற‌து என்று நினைத்துக் கொண்டேன். வ‌ண்டியும் வேக‌ம் பிடித்த‌து.

நான் என் க‌ணவ‌ரிட‌ம் ஏன் இன்று சீக்கிர‌ம் ர‌யில் கிள‌ம்பிவிட்ட‌து 4.45 க்கே கிள‌ம்பிய‌தால் 9.45 க்கு ம‌துரை சென்று விட‌லாம் என்று ம‌கிழ்ச்சியுட‌ன் சொல்லிக் கொண்டிருந்த‌ சிறிது நேர‌த்தில் டி.டி.ஆர் வ‌ந்து எங்க‌ள‌து ப‌ய‌ண‌ச்சீட்டை வாங்கி ச‌ரி பார்த்தார். சிறிது நேர‌ம் புர‌ட்டி புர‌ட்டி பார்த்த‌வ‌ர் ச‌ற்று குழ‌ப்ப‌த்துட‌ன் அம‌ர்ந்து நிதான‌மாக‌ எங்க‌ளைப் பார்க்க‌ ஆர‌ம்பித்தார்.

என‌க்கு சிறிது ப‌த‌ட்ட‌மாக‌ இருந்த‌து ஏனென்றால் அது இன்ட‌ர்நெட்டில் வீட்டிலேயே புக் செய்த‌ டிக்கெட் என்ப‌தால் ஒருவேளை என் க‌ண‌வ‌ர் த‌வ‌றான‌ தேதியில் புக் செய்து விட்டாரோ என்று எண்ணி அவ‌ரிட‌ம் கேட்டேன். அவ‌ரும் இல்லை நான் இர‌ண்டு முறை செக் ப‌ண்ணிவிட்டேன் புற‌ப்ப‌டும் தேதி, ர‌யில் எண் எல்லாமே ச‌ரியாக‌ இருந்த‌து என்றார். ஆனால் டி.டி.ஆர் முக‌த்தை குழ‌ப்ப‌த்துட‌ன் வைத்துக் கொண்டு அவ‌ருடைய‌ சார்ட் ம‌ற்றும் எங்க‌ள‌து ப‌ய‌ண‌ச்சீட்டையும் ப‌ல‌ முறை புர‌ட்டிக்கொண்டிருந்தார். ஒரு வ‌ழியாக‌ ப‌த்து நிமிட‌ம் க‌ழித்து எங்க‌ளிட‌ம் திரும்பி ரொம்ப‌வும் கூலாக‌ சார் நீங்க‌ள் வ‌ண்டி மாறி ஏறிவிட்டீர்க‌ள் என்று சொன்ன‌தும் ஆஹா.. இத‌ற்கா இவ்வ‌ள‌வு அவ‌ச‌ர‌ப்ப‌ட்டு ஏறினோம் என்று நினைத்து ஏமாற்ற‌ம‌டைந்த‌தை சுதாரித்துக்கொண்டு டி.டி.ஆரிட‌ம் இது மும்பை-நாக‌ர்கோவில் வ‌ண்டி தானே, நாங்க‌ள் பார்த்துதானே ஏறினோம் என்றேன். அவ‌ரும் சிரித்துக்கொண்டே இதுவும் மும்பை-நாக‌ர்கோவில் வ‌ண்டி தான் ஆனால் நீங்க‌ள் செல்ல‌ வேண்டிய‌து மும்பையிலிருந்து வ‌ந்து ம‌துரை வ‌ழியாக‌ நாக‌ர்கோவில் செல்லும் வ‌ண்டி, ஆனால் இதுவோ நாக‌ர்கோவிலில் இருந்து ஈரோடு வ‌ந்து மும்பை செல்லும் வ‌ண்டி என்றும், இந்த‌ வ‌ண்டி இர‌ண்டு ம‌ணி நேர‌ம் தாம‌த‌ம் என்ப‌தால் ஈரோட்டிற்கு உங்க‌ள் வ‌ண்டி வ‌ரும் அதே நேர‌த்திற்கு இதுவும் வ‌ந்து விட்ட‌து என்று விள‌க்கினார்.

நாங்க‌ள் ஒருவ‌ரையொருவ‌ர் முக‌த்தைப் பார்த்துகொண்டிருக்கையில் வ‌ண்டி ப‌ல‌த்த‌ வேக‌த்துட‌ன் காவேரி பால‌த்தைக் க‌ட‌ந்து கொண்டிருந்த‌து. இனி என்ன‌ செய்வ‌து என்று டி.டி.ஆரிட‌ம் கேட்ட‌தும், அவ‌ர் வேறு வ‌ழியில்லை நீங்க‌ள் சேல‌த்தில் இற‌ங்கி ப‌ஸ்ஸில் ம‌துரை செல்ல‌ வேண்டிய‌து தான் என்றார். ஒரு வேளை நீங்க‌ள் செல்ல‌ வேண்டிய‌ வ‌ண்டி தாம‌த‌மானால் நீங்க‌ள் சேல‌த்தில் அந்த‌ வ‌ண்டியில் ஏறிக்கொள்ள‌லாம் ஆனால் அது உங்க‌ள் அதிர்ஷ்ட‌த்தைப் பொறுத்த‌து என்று அவ‌ர் சொல்லி வாய் மூடிய‌துமே ச‌ங்க‌கிரியில் அந்த‌ வ‌ண்டி எங்க‌ள் எதிர்புற‌ம் க‌ட‌ந்து சென்றுகொண்டிருந்த‌து. இருந்த‌ ஒரு வ‌ழியும் போய்விட்ட‌து என்ற‌தால் நாங்க‌ள் அடுத்த‌ ர‌யில் ம‌துரைக்கு எப்பொழுது என்ற‌தும் சேல‌த்தில் இர‌வு 2 ம‌னிக்கு என்றார். இர‌வு 2 ம‌ணி வ‌ரை என்ன‌ செய்வ‌து என்று புரியாம‌ல் விழித்த‌பொழுது அவ‌ரே வேறு வ‌ழியில்லை சார், சேல‌த்தில் இற‌ங்கி ம‌துரைக்கு ப‌ஸ் பிடித்து செல்லுங்க‌ள் என்று கூறிவிட்டு அவ‌ர் சென்றுவிட்டார்.

எங்க‌ள‌து நிலைமையை நினைத்து வ‌ருத்த‌ப்ப‌டுவ‌தா இல்லை சிரிப்ப‌தா என்றே தெரிய‌வில்லை, ஏனென்றால் என்னால் ப‌ஸ்ஸில் அதிக‌ தொலைவு ப‌ய‌ண‌ம் செய்ய‌ முடியாது என்ப‌தால் தான் நாங்க‌ள் எப்பொழுதும் ர‌யிலில் ப‌ய‌ண‌ம் செய்வ‌து வ‌ழ‌க்க‌ம். இப்பொழுது அதை விட‌ அதிக‌ தூர‌ம் ப‌ய‌ண‌ம் செய்ய‌ வேண்டுமே என்ன‌ செய்வ‌து என்று வ‌ருந்தினோம். வேறு வ‌ழியில்லை என்ப‌தால் நாங்க‌ளே ஒருவ‌ரையொருவ‌ர் ச‌மாதான‌ப்ப‌டுத்திக் கொண்டிருக்கையிலேயே வ‌ண்டி சேல‌ம் ர‌யில் நிலைய‌த்தை வந்து சேர்ந்த‌து. பின் நாங்க‌ள் சேல‌ம் ப‌ஸ் நிலைய‌ம் சென்று என‌க்கு செருப்பும் வாங்கிக்கொண்டு ம‌துரை போகும் ப‌ஸ்ஸில் ஏறி எப்பொழுது ம‌துரை சென்ற‌டையும் என்று க‌ண்ட‌க்ட‌ரிட‌ம் கேட்ட‌தும் அவ‌ர் ரொம்ப‌ கூலாக‌ ந‌ள்ளிர‌வு 1.30 ம‌ணிக்கு ம‌துரை சென்று விடும் என்றார். ஈரோட்டில் இருந்து 5 ம‌ணி நேர‌ ப‌ஸ் ப‌ய‌ணம் என்னால் முடியாது என்று ர‌யிலில் செல்லும் நாங்கள் அன்று வேறு வ‌ழியின்றி 8 ம‌ணி நேர‌ம் ப‌ய‌ண‌ம் செய்து ம‌துரை சென்ற‌டைந்தோம்.

அன்று முத‌ல் ர‌யில் நிலைய‌ம் சென்றால் என்ன‌ அவ‌ச‌ர‌ம் என்றாலும் ர‌யிலில் ஏறிய‌வுட‌ன் ப‌க்க‌த்து சீட்டில் இருப்ப‌வ‌ர்க‌ளைப் பார்த்து நீங்க‌ள் எங்கே செல்கிறீர்க‌ள் என்று கேட்டு விடுவேன். இன்றும் ஈரோடு பிளாட்பார்மில் ஒரு காலில் செருப்புட‌னும் ஒரு கையில் அறுந்த‌ செருப்பையும் தூக்கிக்கொண்டு ஓடிய‌தை என‌து வாழ்க்கையில் ம‌ற‌க்க‌வே முடியாது.

- மீனா மாத‌வ‌ன், ஈரோடு

.... இங்கே பதியப்பட்டது அனுபவம் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , | 1 மறுமொழி »