சூர்யா ப‌திவுக‌ள்

‘அனுபவக் கதைகள்’ பகுப்புக்கான தொகுப்பு

டார்ஜிலிங் – ஃபிளாஷ் பேக்

பதிந்தவர் சூர்யா மேல் அக்டோபர் 14, 2008

சுமார் ஏழு வருடங்களுக்கு முன் டார்ஜிலிங்கில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இங்கு உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

நாங்கள் சென்னையிலிருந்து கல்கத்தா சென்று அங்கிருந்து ரயிலில் நியூ ஜல்பாய்குரி வரை சென்று பிறகு காரில் சிலிகுரி சென்றோம். சிலிகுரியிலிருந்து மலை ஏற ஆரம்பித்தது எங்கள் கார். சுற்றிலும் பைன் மரங்கள் அடர்ந்த காடு அதிகாலை நேரம். போக்குவரத்தே இல்லாத சாலை. அமைதியாக சென்று கொண்டு இருந்தது எங்கள் கார். அப்பொழுது எனது நண்பர் இந்த இடத்தைப் பார்த்தால் ரோஜா படத்தில் அரவிந்த்சாமியை கடத்திய இடம் போல் உள்ளது என்றார். நான் உடனே பேசாமல் இருங்கள் பயமாக இருக்கிறது என்று சொன்ன பொழுது மற்ற எல்லோரும் சிரித்தனர். சுற்றிலும் உள்ள இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டே பேசி சிரித்தபடி சென்று கொண்டு இருந்தோம்.

சிறிது தொலைவு சென்றதும் ஒரு டாடா சுமோ கார் நின்று கொண்டு இருந்தது, சுற்றிலும் சிறிய கும்பல் நின்று இருந்தது. போக்குவரத்தே இல்லாத சாலையில் கும்பலை பார்த்ததும் ஆச்சர்யப்பட்டு டிரைவரிடம் இங்கே என்ன கும்பல் என்று கேட்டேன், டிரைவர் ஹிந்தியில் பதில் சொன்னதை கூட கவனிக்காமல் மீண்டும் அரட்டை அடிக்க ஆரம்பித்தோம். சற்று தொலைவு சென்றதும் ஒரு சிறிய கும்பல் எங்கள் காரை வழிமறித்தது. டிரைவர் இறங்கி சென்று என்ன என்று விசாரித்துவிட்டு வந்து இங்கே கூர்க்காலாந்தின் தலைவரை யாரோ சுட்டு விட்டார்கள் அதனால் பதற்றமாக உள்ளது எனவே எந்த வண்டியும் மேலே டார்ஜிலிங் செல்ல வேண்டாம் என்று கூறுகிறார்கள் என்று சொன்னார். நாங்கள் உடனே எங்கள் சுற்றுலா எங்கே பாதியில் நின்று விடுமோ என்ற பயத்தில் வேண்டாம் பரவாயில்லை நீங்கள் காரை எடுங்கள் நாங்கள் கண்டிப்பாக டார்ஜிலிங் செல்ல வேண்டும் என்று விபரீதம் புரியாமல் கூறினோம்.

டிரைவரும் உடனே பதில் ஏதும் பேசாமல் அவர்களிடம் ஏதோ கூறி விட்டு வந்து வண்டியை எடுத்தார். வண்டி மேலே செல்ல ஆரம்பித்தது. ஒரு வழியாக டார்ஜிலிங் சென்று விடுவோம் என்ற எண்ணத்தில் அனைவரும் மீண்டும் சிரித்து அரட்டை அடிக்க ஆரம்பித்தோம். சற்று தூரம் சென்றவுடன் ஒரு பெரிய கும்பல் எங்களை வழி மறித்தது. டிரைவர் உடனே வண்டியை நிறுத்தி விட்டு சென்று அவர்களிடம் பேசினார். அவர்கள் ஏதோ கோபமாக கத்தியது தெரிந்தது. டிரைவர் சிறிது நேரம் கழித்து வந்து சார் இதற்கு மேல் வண்டி போக முடியாது சுடப்பட்டது அந்த பகுதியின் மிகப்பெரும் தலைவர் என்பதால் டார்ஜிலிங்கிலும் கலவரம் ஏற்பட்டு விட்டது மேலே போவது மிகவும் ஆபத்து எவ்வளவு சீக்கிரம் திரும்பி செல்கிறோமோ அவ்வளவு நல்லது என்று கூறினார். அப்பொழுது தான் நாங்கள் நன்கு கவனித்தபொழுது எந்த வாகனமும் மேலே இருந்து கீழே வராததையும் கீழே இருந்து மேலே செல்லாததையும் கவனித்தோம். அப்பொழுதுதான் நிலைமை சற்று விபரீதமானது என்று எங்களுக்கு புரிந்தது.

டார்ஜிலிங் பார்க்கும் ஆசையை மூட்டை கட்டி விட்டு முழுதாக ஊர் திரும்பினால் போதும் என்ற முடிவுடன் வண்டியை திருப்பி கீழே இறங்க ஆரம்பித்தோம். அனைவரும் டார்ஜிலிங் செல்லாத சோகத்தில் மூழ்கி அமைதியாக இருந்தோம். சற்று தூரம் இறங்கியதும் முன்னர் எங்களை வழி மறித்த கும்பல் இப்பொழுது வண்டியை நிருத்தினார்கள், இப்பொழுது பார்த்தால் அவர்கள் ஆண்களும் பெண்களுமாக ஒரு பெரிய கும்பலாக கையில் பெரிய தடி, கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் நின்று கூச்சலிட்டுக் கொண்டு இருந்தனர். டிரைவர் இறங்கி சென்று அவர்களிடம் பேசிவிட்டு வந்து அவர்கள் நம்மை கீழே செல்ல விடமாட்டேன் என்கிறார்கள். எங்கள் தலைவரையே சுட்ட பிறகு யாரும் இஙகே உயிருடன் இருக்க கூடாது என்று கத்துகிறார்கள். அவர்கள் வெறியுடன் உள்ளார்கள், நான் கேட்டால் கண்டிப்பாக விடமாட்டார்கள் நீங்கள் யாராவது சென்று கெஞ்சி கேளுங்கள் என்று கூறினார், உடனே அனைவருக்கும் பயத்தில் அழுகையே வந்து விட்டது எங்களுக்குள் பேசிவிட்டு அனைவரும் பெண் சென்று பேசினால் அவர்கள் இரக்கப்படுவார்கள் என்று கூறி ஹிந்தியும் எனக்கு தெரியும் என்பதால் என்னை அனுப்பினார்கள். நான் பயத்துடன் தனியாக காரில் இருந்து இறங்கி அந்த கும்பலிடம் சென்றேன், அவர்கள் அனைவரும் என்னை பார்த்தவுடன் ஆக்ரோஷமாக கத்தினார்கள். நான் அவர்களிடம் தயவு செய்து எங்களை அனுப்பி விடுங்கள் என்று கெஞ்சினேன், உடனே அங்கே இருந்த பெண்கள் உட்பட அனைவரும் இவர்களை விடக்கூடாது தலைவரையே சுட்ட பிறகு யாரும் உயிருடன் இருக்க கூடாது என்று கத்தினார்கள். நான் பயத்தில் அழுது கொண்டே நான் சொல்வதை தயவு செய்து நம்புங்கள் காரில் எங்கள் குழந்தைகள் இருக்கிறார்கள் அவர்களுக்கு குடிக்க பால் கூட இல்லை பசியில் அழுகிறார்கள் தயவு செய்து எங்களை விட்டு விடுங்கள் நாங்கள் போய்விடுகிறோம் என்று கைகூப்பி கெஞ்சினேன்.

உடனே அங்கே இருந்தவர்கள் பயங்கரமாக கத்த ஆரம்பித்தனர். அந்த கூட்டத்தின் தலைவர் போல் இருந்தவர் நான் அழுவதைப் பார்த்து விட்டு அவர்களுடன் சற்று பேசி விட்டு என்னை நோக்கி வந்தார். நான் உயிரை கையில் பிடித்தபடி அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் வந்து சரி நாங்கள் உங்களை விடுவிக்கிறோம் ஆனால் வழியில் எங்கும் நிற்காமல் வேகமாக சென்று விட வேண்டும் என்று கூறினார். நான் உடனே உயிர் தப்பிய மகிழ்ச்சியில் அவர்களுக்கு நன்றி கூறி விட்டு வேகமாக ஓடி வந்து வண்டியில் ஏறி டிரைவரிடம் விஷயத்தைக் கூறி எங்கும் நிறுத்தாமல் ஓட்ட சொன்னேன், வழியில் நாங்கள் பார்த்த டாடா சுமோ துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு ரத்த சகதியுடன் நின்று இருந்தது சுற்றிலும் போலீசார் இருந்தனர். அதிர்ச்சியுடன் அதை பார்த்தபடி நாங்கள் வேகமாக வந்து கொண்டிருந்தோம் அப்பொழுது தான் மேலே செல்லும் பொழுதே டிரைவர் அதைப் பற்றி கூறி இருக்கிறார் ஆனால் நாங்கள் இருந்த ஜாலி மூடில் அதை காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை என்று தெரிந்தது.

வேகமாக கீழே வந்து சிலிகுரியிலுள்ள WBTDC (மேற்கு வங்க சுற்றுலா வளர்ச்சி கழகம்)-ல் ரூம் எடுத்து தங்கினோம், அந்த ஹோட்டலில் மேனேஜர் கூறிய பிறகு தான் நடந்த சம்பவத்தின் முழு விபரீதம் புரிந்தது, சுடப்பட்டவர் கூர்க்காலாந்தின் மிகப் பெரிய தலைவர் அவருக்கு அங்கே பலத்த மரியாதை என்று. வரிசையாக இராணுவ வண்டிகள் அணி வகுத்து சென்றதை ரூமில் இருந்த படி பயத்துடன் பார்த்தோம், டார்ஜிலிங்கின் அடிவாரம் வரை சென்றும் அதை சுற்றி பார்க்க முடியாத வருத்தத்துடன் 5 நாட்களும் லாட்ஜிலேயே இராணுவ பாதுகாப்புடன் (எங்களது ஹோட்டலில் ஒரு மந்திரியும் தங்கி இருந்ததால்) தங்கி விட்டு நாங்கள் முன்பே பதிவு செய்தபடி 5 நாட்கள் கழித்து ஊர் வந்து சேர்ந்தோம்.

ஊர் திரும்பிய பிறகு எங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் டார்ஜிலிங் எப்படி இருந்தது என்று கேட்ட பொழுது மிகவும் நன்றாக இருந்தது, பயங்கிர குளிர் என்று முன்பே நாங்கள் பேசி வைத்தபடி சொன்னோம். அதன் பிறகு தொலைக்காட்சியில் தினமும் அந்த சம்பவத்தைப் பற்றி கூறும்பொழுது நாங்கள் அதில் இருந்து தப்பி வந்ததை எண்ணி டார்ஜிலிங் போகாத வருத்தத்தை மறந்தோம்.

இன்றும் டார்ஜிலிங் என்றால் எனக்குள் ஒரு சிறு நடுக்கம் வரும்…

- மீனா மாத‌வ‌ன், ஈரோடு

.... இங்கே பதியப்பட்டது அனுபவக் கதைகள் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , | 2 மறுமொழிகள் »