பதிந்தவர் சூர்யா மேல் April 21, 2008
வேலை தேடி வெட்டியாக திரியும் தனுஷ் நயன்தாராவின் கம்பெனியில் முயற்சி செய்து நயனின் தயவில் வேலையும் வாங்கி விடுகிறார். பின்னர் தனுஷ் தனது காதலை நயன்தாராவிடம் வெளிப்படுத்த அதை அவர் நிராகரிக்கிறார். தனது மகனின் காதலுக்காக பேச வரும் ரகுவரனை நயன்தாரா பலர் முன்னிலையில் அவமானப்படுத்துகிறார். இந்த அவமானம் தாங்க முடியாமல் அன்று இரவே ரகுவரன் இறக்கிறார். அப்பாவின் திடீர் இழப்பும், காதல் தோல்வியும் தாங்க முடியாமல் தவிக்கும் நேரத்தில் நண்பன் தனது திருமணத்திற்காக அவனது கிராமத்திற்கு அழைக்க, அங்கே செல்லும்போதுதான் தனது காதலி நயன்தாரா மணமகள் என்று தெரிகிறது. அதன் பின் நகரும் ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்பாகவும் நம்மிடையே எதிர்பார்ப்பையும் உண்டாக்குவது படத்திற்கு பலம்.
நயன்தாரா நடிப்பில் அசத்தி இருக்கிறார். குறிப்பாக அலுவலகத்தில் நடக்கும் சண்டையில் ரகுவரன் மற்றும் நயன்தாராவின் நடிப்பில் போட்டி பளிச்சிடுகிறது. படத்தில் ரகுவரன் இறக்கும் காட்சியைப் பார்க்கும்போது அவரது உண்மையான இறப்பு மனதில் வந்து போகிறது. தனுஷின் நடிப்பில் இந்தப்படத்தில் சில காட்சிகளில் ரஜினியின் பாதிப்பைப் பார்க்க முடிகிறது, குறிப்பாக இன்டெர்வியூவிலும், பாம்பை கையில் எடுக்கும்போதும் ரஜினியை நினைவுபடுத்துகிறார்.
நயன்தாராவின் தங்கை தனுஷிடம் செய்யும் ரகளையும் அவரது நடிப்பும் மனதில் நிற்க வைக்கிறது. நயன்தாரா படத்தின் முதல் பாதியில் அதிகாரமாகவும் பின் பாதியில் அடக்கமாகவும் நடித்து அசத்தியிருக்கிறார். சில கிராமத்து காட்சிகள், திணிக்கப்பட்ட சண்டைக்காட்சி என சில இடங்களில் நெருட வைத்தாலும் படம் சற்று வலுவாகவே செல்கிறது.
தனுஷ், ரகுவரன், நயன்தாரா என அனைவரும் நடிப்பில் பின்னியிருக்க, செல்வராகவனின் கதை மற்றும் மித்ரன் ஆர்.ஜவகரின் உழைப்பு படத்தின் வெற்றிக்குக்கு காரணமாக அமைந்திருக்கிறது.
யாரடி நீ மோகினி - ரசிக்கலாம்.
.... இங்கே பதியப்பட்டது சினிமா, விமர்சனம் | குறிச்சொல்லிடப்பட்டது: தனுஷ், நயன்தாரா, ரகுவரன் | 2 மறுமொழிகள் »
பதிந்தவர் சூர்யா மேல் April 10, 2008
தமிழக தபால் நிலையங்களில் ஏர் டெக்கான் விமான டிக்கெட்டுக்களை நாளை முதல் விற்பதற்கு ஏற்பாடு செய்துள்ளது. தமிழகத்தில் இன்டெர்நெட் வசதியுள்ள தபால் நிலையங்களில் டெக்கான் நிருவனம் தனது விமான டிக்கெட்டுகளை விற்பனை செய்ய தபால் துறையுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல நகரங்களில் பொது மக்கள் இந்த வசதியைப் பெறமுடியும். இச்சேவைக்கு ஐந்து சதவிகிதம் சர்வீஸ் சார்ஜ் தபால்துறை பெற்றுக்கொள்ளும். விமான டிக்கெட்டுக்கள் தபால் நிலையங்களில் பெரும் வசதியை கொண்டு வந்தது வரவேற்க வேண்டிய விஷயம் என்பதில் சந்தேகமேயில்லை.
Added on Jun 09, 2008
ரயில், தனியார் பஸ் மற்றும் உள்நாட்டு விமானங்களின் டிக்கெட்டுகளும்……
ரயில் மற்றும் தனியார் பஸ் டிக்கெட்டுகள் பெறும் வசதியும் தபால் நிலையங்களில் தொடங்கியிருப்பது கண்டிப்பாக இப்போதுள்ள ரயில்வே முன்பதிவு நெரிசலை குறைக்கும், அதுமட்டுமில்லாமல் இப்பொழுது உள்நாட்டு விமானங்களின் (இந்தியன் ஏர்லைன்ஸ், ஜெட் ஏர்வேஸ், கிங்பிஷர், பாரமெளண்ட், ஏர் டெக்கான், ஸ்பைஸ் ஜெட்) டிக்கெட்டுகளும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது நல்ல விஷயமே. ஏ.ஆர்.எம்.ஐ. சொல்யூசன் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்த வசதி அறிமுகப்படுத்துவதாகவும், அரசு பஸ் டிக்கெட்டுகளும், இன்ஸ்டன்ட் மணியார்டர் வசதியும் விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்வது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து தபால் நிலையங்களிலும் இந்த வசதி விரைவில் அறிமுகப்படுத்தினால் நல்ல முன்னேற்றம் தான்…
.... இங்கே பதியப்பட்டது செய்திகள் | குறிச்சொல்லிடப்பட்டது: ஏர் டெக்கான் | Leave a Comment »
பதிந்தவர் சூர்யா மேல் April 6, 2008
கர்நாடக அரசைக் கண்டித்தும், கன்னட அமைப்புகளின் வன்முறைகளை எதிர்த்தும் தமிழ் திரையுலகினர் அனைவரும் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். இதில் ரஜினி, கமல் உட்பட அனைத்து திரையுலக கலைஞர்களும் கலந்து கொண்டனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்காக சென்னை சேப்பாக்கம் அரசினர் மாளிகை எதிரில் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டிருந்தது.
காலை 8 மணிக்குத் தொடங்கிய உண்ணாவிரதம் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இந்த போராட்டத்தின் காரணமாக உலகமெங்கும் நடைபெறவிருந்த படப்பிடிப்புகளும், தமிழக திரை அரங்குகளில் காலை மற்றும் பகல் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. கர்நாடகாவில் அரசியல் தலைவர்கள் தேர்தலுக்காக ஆட்டம் போடுகிறார்கள் என்றும் இதை முதலமைச்சர் உடனடியாக தடுத்து இப்பொழுதே நகத்தால் கிள்ளி எறிய வேண்டும் என்றும் ரஜினிகாந்த் ஆவேசமாகப் பேசினார். தமிழ்த் திரையுலகமே ஒரே இடத்தில் ஒன்று கூடி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டது நமக்குள் இருக்கும் ஒற்றுமையைக் காட்டியது.
.... இங்கே பதியப்பட்டது அரசியல், செய்திகள் | குறிச்சொல்லிடப்பட்டது: கமல், ரஜினி | Leave a Comment »
பதிந்தவர் சூர்யா மேல் April 1, 2008
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு இத்திட்டத்தை நிறைவேற்றியே தீறும் என்ற அறிவிப்புக்கு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெங்களூரில் நடந்த கலவரத்தில் தமிழ் படம் திரையிடப்படும் தியேட்டர்கள், தமிழ்ச் சங்கம், தமிழக பேருந்துகள் மற்றும் லாரிகள் கடுமையாக தாக்கப்பட்டிருக்கின்றன. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கர்நாடக போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேடிக்கையே.
தமிழர்களுக்கு எதிராக நடக்கும் இத்தகைய தாக்குதல்களையும் போராட்டங்களையும் மத்திய அரசின் கவனத்திற்கு தமிழக அரசு உடனடியாக கொண்டு சென்று தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பம்.
.... இங்கே பதியப்பட்டது அரசியல், செய்திகள் | குறிச்சொல்லிடப்பட்டது: ஒகேனக்கல், வன்முறை | Leave a Comment »