எஸ்.பி.பி
பதிந்தவர் சூர்யா மேல் மார்ச் 31, 2008
பத்மஸ்ரீ எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஈரோட்டிற்கு ஒரு ஆர்க்கெஸ்ட்ராவிற்காக வந்து இருந்தார். நிகழ்ச்சிப்படி அன்று மாலை 6.30 க்கு தொடங்க வேண்டிய நிகழ்ச்சி எதிர்பாராது வந்த மழையின் காரணத்தினால் தாமதமாகியது. பொது மக்கள் அனைவரும் சுமார் ஒன்றரை மணி நேரம் பொறுமையாய் காத்திருந்தனர். சிறிது நேரத்திற்கு பிறகு மழை சற்று ஓய்ந்தது என்றாலும் சிறு தூரல் இருந்தது. மக்கள் கலைந்து செல்ல ஆரம்பித்தபோது இதை எல்லாம் காரினுள் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த எஸ்.பி.பி. மைக்கில் யாரும் கலைந்து செல்ல வேண்டாம், மழை நின்றவுடன் கண்டிப்பாக எவ்வளவு நேரமானாலும் உங்களுக்காக முழு நிகழ்ச்சியும் நீங்கள் எதிர்பார்த்தபடி நடக்கும் என்றும், யாரும் அதுவரை அவசரப்பட்டு போக வேண்டாம் எனவும் கூறினார். ஆனாலும் சிலர் கலைந்து செல்வதை பார்த்ததும் மழை தூரலைக்கூட பொருட்படுத்தாமல் அவர் அனைத்து இன்ஸ்ட்ருமெண்ட்களையும் மழை தூரலால் நனையாதபடி ஏற்பாடு செய்யுமாறும் தான் பாடப்போவதகவும் மைக்கில் பேச, அனைவரும் சற்று நின்று வேடிக்கை பார்த்தனர் இந்த மழையில் எப்படி ஆரம்பிப்பார்கள் என்று.
ஐந்து நிமிடம் அமைதியாக இருந்தது. மழையினால் ஆர்க்கெஸ்ட்ரா குழுவினர் ரெடியாக சற்று நேரம் எடுத்தது. ஆனால் அதற்கு மேலும் மக்களை ஏமாற்ற எஸ்.பி. க்கு மனம் வரவில்லையோ என்னவோ, எந்த ஒரு பக்கவாதியமும் இல்லாமல் காரில் இருந்து குடையுடன் இறங்கி அவர் “இளைய நிலா” பாட்டை பாட ஆரம்பித்தபோது அதுவரை ஓரமாக மழைக்கு ஒதுங்கிய அனைவரும் மேடை அருகில் வர ஆரம்பித்தனர். அவர் பாடிக்கொண்டே மேடைக்கு வருவதை பார்த்த மக்கள் ஒரே ஆரவாரம். அந்தப்பாட்டில் ஆரம்பித்த அவர் தொடர்ந்து மூன்று பாடல்களை பாடி மக்களை மகிழ்ச்சியின் உச்சத்திர்க்கே கொண்டு சென்றார் என்றால் அது மிகையாகது. அவர் பாட ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே மழையும் விட்டது, ஆர்க்கெஸ்ட்ரா குழுவினரும் தங்கள் இன்ஸ்ட்ருமெண்ட்களை வாசிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் எஸ்.பி. ஒரு பாட்டை முடித்தவுடன் அடுத்த பாட்டிற்கு இடைவெளி இல்லாமல் பாட ஆரம்பித்தார். அவர் பாட ஆரம்பித்த பிறகே இசையை குழுவினர் வாசிக்க முடிந்தது.
அனுராதா ஸ்ரீராமும் தன் பங்கிற்கு அசத்த நிகழ்ச்சி களை கட்டியது. அன்று நாங்கள் பார்த்தது இசை கச்சேரியை மட்டுமல்ல, எஸ்.பி. என்ற ஒரு நல்ல உள்ளம் கொண்ட மனிதரையும் தான்.